கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூன் 16, 2023
இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் இடங்கள் கற்பனையானவை.
கீதா ஓரளவான வயதுவந்த இல்லத்தரசி என்பதுடன் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அதிகளவான நேரத்தை கையடக்கத் தொலைபேசியிலேயே செலவழித்தாள். அவள் பொதுவாகக் கட்டுரைகள், செய்திகள் என்பவற்றை கையடக்கத் தொலைபேசியிலேயே பார்ப்பதற்கு பழக்கப்படுத்திக்கொண்டிருந்தாள். அதேபோன்று யூடியூபில் வீடியோக்கள் பார்ப்பதுடன், வாட்ஸ்அப் மூலமே தனது நண்பர்களுடனும் கதைப்பாள்.
ஒரு நாள் அவள் ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவளுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வந்தது, அமெரிக்காவில் நடந்த ஒரு தொலைபேசி இலக்கங்களுக்கான அதிர்ஷ்ட இலாபச் சீட்டிழுப்பில் அவள் வெற்றிபெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கீதாவுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. சொல்ல முடியாதளவு மகிழ்ச்சியடைந்தாள்.
அதிர்ஷ்ட இலாப சீட்டு முகவர்: உங்களுக்கு எமது வாழ்த்துகள், சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மதிப்புடைய பரிசுத் தொகை உங்களுக்கு கிடைத்திருக்கின்றது!!!!
கீதா: ஓஹோ அப்படியா, எனக்கு எப்படி பரிசுகளை அனுப்புவீர்கள்??
அதிர்ஷ்ட இலாபச் சீட்டு முகவர்: உங்கள் பரிசுப் பொருட்களின் படங்களில் காண்பதற்கு விரும்புகிறீர்களா?
கீதா: ஆமாம், நிச்சயமாக!
அதிர்ஷ்ட இலாப சீட்டு முகவர்: மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். மேலும் இது தெரிந்தால் திருடர்கள் கூட உங்களைப் பின்தொடர்வதற்கு வாய்ப்புகள் ஏற்படலாம் என்பதால் இதை நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது, சரியா?
அதிர்ஷ்ட இலாப சீட்டு முகவர் சில ஆடம்பரப் பொருட்களின் கவர்ச்சிகரமான படங்களை கீதாவுக்கு அனுப்பினார்.
இந்த புகைப்படங்களைப் பார்த்தும் கீதா மேலும் உற்சாகமடைந்தார். மறுமுனையில் முகவர், பரிசுகளைப் பெற ஒரு லட்சம் ரூபாய் (100,000/-) கிளியரன்ஸ் கட்டணமாக ஒரு வங்கிக் கணக்குக்குச் செலுத்த வேண்டும் என்றும் கீதாவுடன் அவர் வங்கி விபரங்களைப் பகிர்ந்து கொண்டார். ஆனால் கீதாவிடம் அவ்வளவு பணம் இல்லை. பணம் தேடுவதற்கான வழியைப் பற்றி அவள் யோசித்துக்கொண்டே இருக்கிறாள். இந்த சந்தர்ப்பத்தில் தனது காணியுறுதிப் பத்திரத்தை அடைமானம் வைப்பதற்கு எண்ணுகிறாள். மறுநாளே, உடனடியாக அடைமானம் வைத்து பெற்றுக்கொண்ட பணத்தைக் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் வைப்புச் செய்கிறாள்.
பின்னர், அந்த காரியம் பூர்த்தியாகிவிட்டது என்பதைத் தெரிவிப்பதற்காக அவள் அமெரிக்க முகவரை தொடர்புகொள்ள முயன்றாள். ஆனால் அவளால் அவனைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவள் பல நாட்களாக அவனைத் தொடர்புகொள்ள முயன்றாளும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இறுதியாக, கீதா தனது இளைய மகளிடம் இந்தக் கதையைச் சொல்ல, இதில் ஏதோ தவறு இருப்பதாகச் சந்தேகித்த அவள் உடனடியாக ஆலோசனை பெற ஹிதவதியை அழைத்துப் பேசுகிறாள்.
ஹிதவதி, அந்த தாய் எதிர்கொண்ட வித்தியாசமான அனுபவத்தைக் கேட்டு, மேலும் இது இந்த நாட்களில் பரவலாக இடம்பெற்று வரும் ஒரு மோசடி என்பதை தெளிவுபடுத்தினார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடிகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் அவளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் இணையக் குற்றவாளிகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சமூக ஊடக முறைப்பாட்டுப் பிரிவில் முறைப்பாடு செய்யுமாறும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
முன்னெச்சரிக்கை ஆலோசனைகள்:
- நீங்கள் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுப் போட்டி அல்லது வேறு போட்டிகளில் நுழையவில்லை என்றால், உங்களால் வெற்றி பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
- பரிசு அல்லது வெற்றி பெற்றமைக்காக யாரேனும் உங்களிடம் பணத்தை முன்பணமாகச் செலுத்தச் சொன்னால், அது எப்போதும் மோசடியாகவே இருக்கும். முறையான அதிர்ஷ்ட இலாபச் சீட்டிழுப்புகளின் வெற்றிப் பரிசுகளைப் பெற நீங்கள் எந்தவிதமான கட்டணங்களும் செலுத்த வேண்டியதில்லை.
- இணையக் (சைபர்)-குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள், அதனுடன் தொடர்புடைய ஆதாரங்களுடன் (சரியான இணைப்புகள், திரைக்காட்சிகள் போன்றவை) தெளிவாக்கப் பதியப்பட்டிருந்தால், அவற்றை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கலாம் அல்லது பதிவுத் தபாலில் “பணிப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு 01” என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் dir.ccid@police.gov.lk எனும் மின்னஞ்சலூடகவும் புகார்களை அனுப்பி வைக்க முடியும்.