கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஜூலை 19, 2024
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை..
புபுது மற்றும் சஹானி ஆகிய இளம் தம்பதியினர் ஒரு சிறு ஆண் குழந்தையுடன் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய குழந்தை ஆற்றல் நிறைந்த, குறும்பத்தனமான குழந்தையாக இருந்தது. இருப்பினும், காலம் கடந்து செல்ல, குழந்தை விளையாடிய பிறகு அதிக சோர்வடைவதாக சஹானியிடம் கூறியது. ஆரம்பத்தில், சஹானி அதை பெரிதாக பொருட்படத்தவில்லை, ஆனால் நாட்கள் கடந்து செல்ல, நிலைமை மோசமடைவதை உணர்ந்து, தங்கள் மகனை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தாள்.
மருத்துவர் சில பரிசோதனைகளை பரிந்துரை செய்ததோடு, அறிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் கூறினார். மருத்துவர், மருத்துவ அறிக்கைகளை மதிப்பீடு செய்த பின், முதலில் செய்தியைக் கேட்டதும் பயப்பட வேண்டாம் என்று புபுடுவிடம் கேட்டுக்கொண்டார். துரதிர்ஷ்டவசமாக, அவர்களது மகன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்ததோடு, அது புற்று நோயின் ஆரம்ப கட்டம் என்பதால், சிகிச்சைகள் மூலம் குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மருத்துவர் அவர்களுக்கு உறுதியாக கூறினார்.
தனது மகனின் இந்நோய் நிலைமையை கேட்ட புபுது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆழ்ந்த கவலைக்குட்பட்டார். அவர் அங்கிருந்து கண்ணீர் வழிந்த முகத்துடன் வெளியே வந்த போது சஹானி அவருக்கு ஆறுதல் கூற விரைந்தாள். சிறிது நேரம் கழித்து, புபுது சஹானியிடம் குறத்த செய்தியைப் பகிர்ந்து கொள்ள, அவளும் கவலையுடன் அழுது கொண்டிருந்தாள். இருப்பினும், புபுது சஹானியிடம் தங்கள் மகன் குணமடைவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார்.
மீண்டும் ஒரு முறை புபுது மருத்துவரிடம் பேசிய போது, உங்களுடைய மகனை சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர் அவர்களுக்கு பரிந்துரை செய்ததோடு, மேலும் அதற்கு அதிக செலவாகும் எனவும் மருத்துவர் குறிப்பிட்டார். புபுது மருத்துவமனையை விட்டு வெளியேறியதும், உடனடியாக சிகிச்சைக்கு தேவையான நிதியை திரட்டத் திட்டமிடத் தொடங்கினார்.
புபுது : சஹானி, கடன் எடுக்கலாம் என நினைக்கிறேன், ஆனால் அது மட்டும் போதுமாகும் என்று நினைக்கவில்லை.
சஹானி : நிதி திரட்டும் இணையதளங்கள் மற்றும் முகப்புத்தகத்தில் சில விளம்பரங்களை வெளியிடலாமா? என்னால் விளம்பரத்தை உருவாக்க முடியும்
புபுது : அதுவும் சிறந்த யோசனைதான். அதை செய்வோம்
ஒரு இதயப்பூர்வமான செய்தியை எழுதி, புபுதுவின் வங்கிக்கணக்கு இலக்கத்துடன் தங்கள் மகனின் புகைப்படங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளுடன் ஒரு விளம்பரத்தை சஹானி உருவாக்கினாள். மேலும் அவள் அதனை பேஸ்புக் மற்றும் பல்வேறு நிதி திரட்டும் வலைத்தளங்களில் வெளியிட்டாள். அது குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றதோடு ஒரு நாளில் ஏராளமானவர்களிடையே அது பகிரப்பட்டது. மக்கள் தங்கள் ஆதரவையும் பெருந்தன்மையையும் வெளிக்காட்டும் விதமாக, அவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்க தொடங்கினார்கள்.
ஒரு வாரம் கழித்து, சஹானிக்கு அவளது தோழி ஒருவரிடமிருந்து அதிர்ச்சியான செய்தி வந்தது.
சஹானியின் தோழி : ஹலோ சஹானி, உங்கள் மகனின் பதிவை யாரோ ஒருவர் பகிர்ந்திருப்பதை பார்த்தேன், ஆனால் அதில் குறிப்பிடப்பட்டிருந்த கணக்கு இலக்கமும் பெயரும் புபுதுவுடையதல்ல.
சஹானி : அப்படியா? இது எப்படி நடந்தது?
சஹானியின் தோழி : எனக்கு உறுதியாக தெரியவில்லை. இப்போதே நீங்கள் புபுதுவிற்கு தெரியப்படுத்துங்கள்.
கவலையும் குழப்பமும் அடைந்த சஹானி, புபுதுவை அழைத்து இத்தகவலை தெரியப்படுத்தினாள். புபுது, தனது நண்பர்களிடமிருந்து ஆலோசனையை பெற்றபோது அத்தகைய சூழ்நிலைகளின் போது ஆதரவை வழங்குவதில் அனுபவம் வாய்ந்த ஒரு முன்முயற்சியான ஹிதவதியை தொடர்பு கொள்ளுமாறு அவர்கள் பரிந்துரை செய்தனர்.
புபுது ஹிதவாதியை தொடர்பு கொண்டு நடந்ததை விளக்கினார். மாற்றப்பட்ட பகிர்வுகள் குறித்த தேவையான அனைத்து தகவல்களையும் சேகரித்து உடனடியாக புகாரளிக்குமாறு புபுதுவிற்கு ஹிதவதி அறிவுறுத்தியது. குறித்த பகிர்வை உன்னிப்பாகச் சரிபார்த்து, மேலதிக உதவிகள் தேவைப்பட்டால் மீண்டும் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறை கூறியது. மேலும், குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிசிஐடி) மூலம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பையும் அவர்களுக்கு ஹிதவாதி வழங்கியது.
முன்னெச்சரிக்கை குறிப்புகள்:
- உங்களுடைய சொந்த அல்லது வேறொருவரின் புகைப்படங்கள் மூன்றாம் நபரினால் தவறாகப் பயன்படுத்தப்படுவதை கண்டால் உடனடியாக புகாரளிக்கவும். பொதுவாக ஒரு துல்லியமான அறிக்கை போதுமானதாகும்
- உங்கள் பிள்ளை 13 வயதிற்குட்பட்டவராக இருந்தால், அவருடைய புகைப்படத்தை முகப்புத்தகத்திலிருந்து நீக்க விரும்பினால், முகப்புத்தக உதவி மையம் வழங்கிய இந்தப் படிவத்தை நீங்கள் நிரப்பலாம்.
- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) 1929 சிறுவர் உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும், இது இலங்கையில் நடைபெறும் சகல விதமான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான நடவடிக்கையை உறுதி செய்கிறது.
- சைபர்-கிரிமினல் புகார்களுடன் தொடர்புடைய ஆதரிக்கப்படும் ஆதாரங்களை சீ.ஐ.டீ இற்கு, “பணிப்பாளர், குற்றவியல் விசாரணை திணைக்களம், கொழும்பு 01” என்ற முகவரியிற்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
- குடும்பப் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது வேறு தகவல்களை நிகழ்நிலையில் வெளியிடும் போது உங்களை எதிர்மறையாக பாதித்து தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்கள் தொடர்பாக புகாரளிப்பதற்கும் அகற்றுவதற்கும் ஹிதவதியை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்