கடைசியாக புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 18, 2024

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.


குவைத் நாட்டில் பரபரப்பான ஒரு நகரத்தில் அனுலா என்ற பெண்மணி இருந்தாள். அவள் ஒரு பணக்காரக் குடும்பத்தில் வீட்டு வேலை செய்து வந்தாள். அனுலா கனிவானவள், கடினமாக உழைத்தாள். அவள் தனக்கும் தன் கணவனான சஞ்சயாவுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை விரும்பினாள்.

ஒரு நாள் அனுலாவின் போன் உடைந்தது. அப்போது அந்த வீட்டில் சாரதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த விக்ரம் என்ற நபர், தான் அதனை பழுதுபார்ப்பதற்கு எடுத்துச் செல்வதாகக் கூறினார். அனுலா அவனை நம்பி தன் கைத்தொலைபேசியை அவனிடம் கொடுத்தாள்.

ஆனால் விக்ரம் நல்லவன் இல்லை; அனுலா அவன் மீது வைத்திருந்த நம்பிக்கையை உடைத்தான். அவன் அவளது தொலைபேசியில் கேலரியை அவதானித்தான். சில படங்களைக் கண்டுபிடித்து அவற்றை மோசமாகத் தோற்றமளிக்கச் செய்தான். பின் அனுலாவை மெதுவாக அச்சுறுத்தல் செய்ய ஆரம்பித்தான். அவன் அவளிடம் பணம் கேட்டு, மோசமாக எடிட் செய்யப்பட்ட படங்களை அவளது கணவருக்கு அனுப்பி வைப்பதாக கூறினான்.

அனுலா மிகவும் பயந்தாள். அவள் அகப்பட்டுவிட்டதை உணர்ந்து மிகவும் வெட்கப்பட்டாள். விக்ரம் அவளுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பினான், அத்துடன் அவளது உண்மையான படங்களை பெற நினைத்தான், மேலும் வீடியோ அழைப்புகளையும் கோரினான். பீதியடைந்த அனுலா அவனது கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டாள். அவன் அனுலாவுக்குத் தெரியாமல் அவர்களது வீடியோ அழைப்புகளை பதிவு செய்தான். இப்போது விக்ரம் உண்மையான படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் மூலம் அனுலாவை அச்சுறுத்தல் செய்து கொண்டிருந்தான்.

விக்ரம்: இந்தப் படங்களையெல்லாம் உன் கணவனுக்கு அனுப்பப் போகிறேன். பொறுத்திருந்து பார்.

அனுலா: தயவு செய்து அவ்வாறு செய்ய வேண்டாம். என் குடும்ப வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம்.

அனுலாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் சஞ்சயாவை நேசித்தாள், விக்ரம் அனுப்புவதாக கூறி மிரட்டுவதை சஞ்சயா பார்ப்பதை விரும்பவில்லை. அவள் தனியாக இருப்பதாக உணர்ந்தாள்.

விக்ரம் எந்த இரக்கமும் இல்லாமல், அனைத்து வீடியோக்களையும் படங்களையும் அனுலாவின் கணவருக்கு அனுப்பினான். இதனால் அனுலா கடும் சிக்கலில் சிக்கினாள். அவளுடைய கணவர் அவளைக் குற்றம் சாட்டத் தொடங்கினார், ஒவ்வொரு நாளும் அவளை வற்புறுத்தினார். அதே சமயம், விக்ரமும் அவளை மிரட்டிக்கொண்டிருந்தான், அவள் மூழ்கடிக்கப்பட்டதாக உணர்ந்தாள். அனுலா படிப்படியாக மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானாள்.

இந்நேரத்தில், இலங்கையில் வசிக்கும் அவளுடைய அத்தான் மட்டுமே அவளுக்கு உதவக்கூடிய நபராக இருந்தார். இப்படியே போனால் அனுலா தற்கொலை செய்து கொள்ள நினைக்கலாம் என்று அவர் கவலைப்பட்டார். எனவே, அவர் இலங்கைக்கு தப்பிச் செல்ல உதவுவதற்காக கடுமையாக உழைத்து அவளை தொலைவில் உள்ள ஓரு மருத்துவமனையில் மறைத்து வைத்தார். இதற்கிடையில், அவளுக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில், அவளுடைய கணவர் அவளைத் தேடிக்கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில், அனுலாவின் அத்தான் ஹிதவதி இனைத் தொடர்பு கொண்டு அவளது கதையைப் பகிர்ந்து கொண்டார். கவனமாகக் கிரகித்த ஹிதவதி, மருத்துவமனையை விட்டு வெளியேறிய பிறகு அனுலா உணர்ச்சிவசப்பட்டதாக உணர்ந்தால், அனுலாவை Special Mental Health Hotline (1926) இனைத் தொடர்பு கொள்ள வழிகாட்டுமாறு அவருக்கு அறிவுறுத்தினர். மேலும், விக்ரமின் தொலைபேசி இலக்கம் தொடர்பாக வாட்ஸ்அப்பில் அறிக்கையிடவும், அச்சுறுத்தல் குறுஞ்செய்திகளின் அனைத்து ஸ்கிரீன் ஷாட்களையும் வைத்திருக்குமாறு ஹிதவதி பரிந்துரைத்தனர். இறுதியாக, சட்ட உதவிக்காக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவை (சிசிஐடி) அணுகுமாறும் ஹிதவதி பரிந்துரைத்தனர்.

ஹிதவதி சரியான நேரத்தில் வழங்கிய ஆலோசனைக்கு அனுலாவின் அத்தான் நன்றி தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கைக் குறிப்புகள்:

  • உங்கள் கைத்தொலைபேசியின் உள்ளடக்கங்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் அதை யாரிடமும் கொடுக்க வேண்டாம்.
  • உங்கள் தொலைபேசியைப் பழுதுபார்ப்பதற்கு எப்போதும் நம்பகமான இடத்தைத் தேர்வு செய்யுங்கள் அத்துடன் உங்கள் தொலைபேசி மாடலுக்கான அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களைத் தேர்வுசெய்ய முயற்சியுங்கள்.
  • அச்சுறுத்தல் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
  • உங்கள் ஆதரவு வலையமைப்பை நம்புங்கள்.
  • அச்சுறுத்தல் செய்பவர்கள் சமூக ஊடக தளம் வழியாக உங்களை அணுகினால், அவர்களின் சுயவிவரங்களைப் புகாரளித்து தடுக்கவும்.
  • இதுபோன்ற சம்பவங்களால் நீங்கள் மனச்சோர்வடைந்தால் விசேட மனநல பிரிவின் 1926 என்ற வாடிக்கையாளர் சேவையை தொடர்புகொள்ளவும்.
  • இணையம் வழியிலான-குற்றவியல் முறைப்பாடுகள் தொடர்புடைய ஆதாரங்களுடன் (சரியான இணைப்புகள், திரைக்காட்சிகள் போன்றவை) தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அவற்றை CIDயிடம் ஒப்படைக்கலாம் அல்லது பதிவுத் தபாலில் “பணிப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு 01” என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், dir.ccid@police.gov.lk / report@cid.police.gov.lk என்ற முகவரியிலும் மின்னஞ்சல் அனுப்ப உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.