கடைசியாக புதுப்பிக்கப்பட்டது பிப்ரவரி 17, 2025

இன்றைய டிஜிட்டல் உலகில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க, உங்கள் சாதனங்களையும் மென்பொருளையும் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியமாகும். கைத் தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் மேசைக் கணினிகள் ஆகியன இயக்கு முறைமைகள் (OS), செயலிகள் மற்றும் பாதுகாப்பு செய்நிரல்கள் போன்ற சிக்கலான மென்பொருள்களை இயக்குகின்றன. எல்லாவற்றையும் புதுப்பித்து வைத்திருப்பது, ஹேக்கர்கள் மற்றும் தீம்பொருளிலிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய உதவுகிறது, சாத்தியமான தரவு திருட்டு, கோப்பு மறைகுறியாக்கம்(encryption) அல்லது சாதன செயலிழப்பு ஆகியவற்றைத் தடுக்கிறது.
ஏன் சாதனங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும்?
- பாதுகாப்பு இணைப்புகள் (Security Patches): சாதன உற்பத்தியாளர்கள் மற்றும் செயலி வடிவமைப்பாளர்கள் பிழைகளைச் சரிசெய்வதற்கும், புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும் மென்பொருள் புதுப்பிப்புகளை தொடர்ந்து வெளியிடுகின்றனர். மிக முக்கியமாக, அவர்கள் அறிந்த வலிமையற்ற நிலைகளை (vulnerabilities) நிவர்த்தி செய்ய பாதுகாப்பு இணைப்புகளை வழங்குகிறார்கள். பயனர் சாதனங்களை சமரசம் செய்ய தாக்குபவர்கள் பெரும்பாலும் இந்த வலிமையற்ற நிலைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
- புதிய அம்சங்கள் மற்றும் செயல்திறன்: பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு மற்றும் உங்கள் சாதனத்தின் வேகத்தையும் செயல்திறனையும் மேம்படுத்துவதற்கு புதிய அம்சங்களுடன் கூடிய புதுப்பிப்புகள் அடிக்கடி வருகின்றன.
- தானியங்கு புதுப்பிப்புகள்: பெரும்பாலான சாதனங்கள் தானியங்கி புதுப்பிப்புகளை ஆதரிக்கின்றன, ஆனால் அது இயக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்வது எப்போதும் நல்லது. புதுப்பிப்புகள் தன்னியக்கமாக இருந்தால், அவை உங்கள் தலையீடு இல்லாமல் நிறுவப்படும், ஆனால் அவ்வப்போது அவற்றில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
எதைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும்?
பாதுகாப்பைப் பராமரிக்க பல வகையான மென்பொருள்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்:
- இயக்கு முறைமை(OS): உங்கள் சாதனத்தின் OS இனைப் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள். பெரும்பாலான இயக்கு முறைமைகள் தானியங்கி புதுப்பிப்புகளை அனுமதிக்கின்றன, ஆனால் உங்கள் கணினியில் இந்த அம்சம் இயக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்.
- வலை மேலோடி(Web Browser) மற்றும் விரிவாக்கங்கள் (Extensions): மேலோடிகள் குறிப்பாக கணினிவலை தாக்குதல்களுக்கு (cyberattacks) வலிமையற்ற நிலைக்கு ஆளாகின்றன. உங்கள் மேலொடி, இந்த விரிவாக்கங்களுடன் சேர்ந்து, தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்யவும்.
- மூன்றாம் தரப்பு செயலிகள்: வெளிப்புற மூலங்களிலிருந்து நிறுவப்பட்ட செயலிகள் (அலுவலக செயலிகள், புகைப்பட எடிட்டிங் செயலிகள் போன்றவை) புதுப்பிக்கப்பட வேண்டும். சில செயலிகள் தானாகவே புதுப்பிக்கப்படும், மற்றவை கைமுறையாகப் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம்.
- வைரஸ் தடுப்பு மென்பொருள்: நீங்கள் வைரஸ் தடுப்பு மென்பொருளைப் பயன்படுத்தினால், அது சமீபத்திய வைரஸ் வரையறைகளைச் சேர்க்க புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இது புதிய அச்சுறுத்தல்களை அடையாளம் காண உதவுகிறது.
உங்கள் சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான முக்கிய படிமுறைகள்:
- தானியங்கி புதுப்பிப்புகளை இயக்குக: OS, மேலோடி, வைரஸ் தடுப்பு மற்றும் அலுவலக பயன்பாடுகள் உட்பட அனைத்து முக்கியமான மென்பொருட்களுக்கும் தானியங்கி புதுப்பிப்புகள் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும்.
- புதுப்பிப்புகளை உடனடியாக நிறுவவும்: புதுப்பிப்பு குறித்து அறிவிக்கப்பட்டால், உங்கள் சாதனம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய சில நாட்களுக்குள் அதனை உங்கள் சாதனத்தில் நிறுவவும்.
- வழக்கமான காப்புப்பிரதிகள்(backups): தானியங்கி காப்புப்பிரதிகளை அமைக்கவும் அல்லது தரவை தொடர்ந்து காப்புப் பிரதி எடுக்கவும், இதனால் புதுப்பிப்பின் போது ஏதேனும் தவறு நடந்தால் அதை மீட்டெடுக்கலாம்.
- மென்பொருள் புதுப்பிப்புகளைக் கண்காணிக்கவும்: உங்கள் சாதனங்கள் தங்களை முறையாகப் புதுப்பித்துக் கொள்கின்றனவா என்பதை அவ்வப்போது சரிபார்க்கவும். நீங்கள் சிக்கல்களை எதிர்கொண்டால் (உதாரணமாக, குறைந்த சேமிப்பிடம்), அவற்றை உடனடியாக சரிசெய்யவும்.
- நீண்ட கால ஆதரவு கொண்ட சாதனங்களைத் தேர்வு செய்யவும்: புதிய சாதனங்களை வாங்கும் போது, உற்பத்தியாளர் அவற்றை எவ்வளவு காலம் ஆதரிக்கிறார் என்பதைக் கவனியுங்கள். நீண்ட கால ஆதரவு என்பது நீங்கள் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறுவீர்கள் என்பதாகும்.