கடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 15, 2021
கணினி வைரஸ் என்றால் என்ன ?
கணினி வைரஸ் என்பது ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு பரவக்கூடியதுடன் கணினியின் செயல்பாடுகளைக் கூட பாதிக்கவல்ல ஒரு சிறிய நிரலாகும். இத்தகைய வைரஸ்கள் கணினியில் சேமிக்கப்பட்ட எந்த தரவையும் மாற்றலாம் அல்லது அழிக்கலாம். இப்போதுள்ள பெரும்பாலான வைரஸ்கள் தங்களை மின்னஞ்சல்களுடன் இணைத்து ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு பரப்பும் இயங்கக்கூடிய கோப்புகளாகும். இவை செயல்படுத்தப்பட்டதும் அல்லது திறந்ததும் இந்த வைரஸ்கள் பிற பயன்பாடுகளுக்குள் அல்லது கணினிகளுக்கு பரவுகின்றன.
வைரஸின் பொதுவான வடிவங்கள்
ஸ்பைவேர் , அட்வேர், ட்ரோஜன் ஹோர்சஸ், வோர்ம்ஸ் உள்ளிட்ட பல வகையான வைரஸ்கள் அல்லது தீம்பொருட்கள் காணப்படுகின்றன. இவ் வகையான தீம்பொருள்கள் உங்களுக்கே தெரியாமல் உங்கள் தரவை அழிக்கலாம் அல்லது திருடலாம்.
ஸ்பைவேர் – வைரஸின் பொதுவான வகைகளில் ஒன்று. கணினியின் உரிமையாளர் / பயனருக்குத் தெரியாமல் கணினிகளின் செயல்பாட்டைப் பற்றிய பயனர் தரவு / தகவல் மற்றும் விவரங்களை இவை சேகரிக்கின்றன (இதில் அணுகப்பட்ட தரவு அல்லது சேவைகள், இணையத்தில் பார்வையிட்ட தரவு போன்றவை அடங்கும்).
அட்வேர் – பயனரின் அனுமதியின்றி கணினியில் இவற்றை நிறுவுவதன் மூலம் உங்கள் கணனித் திரையில் விளம்பரங்களை காட்டும் . இணைய பயன்பாட்டு தரவு மற்றும் பயனரின் பழக்கவழக்கங்களை அட்வேர் கண்காணிக்கும்.
ட்ரோஜன் ஹார்ஸ்கள் – இந்த வகை வைரஸ்கள் சுயமாக செயல்பட முடியாவை என்பதுடன் அவை முதலில் பயனுள்ளதாக புனைவேடம் கொண்டு பின்னணியில் பயனரின் தனிப்பட்ட தரவை சேகரித்து கணினியை சுரண்டுவதற்கும் தீங்கு விளைவிப்பதற்கும் ஒரு சரியான திகதி அல்லது நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தீங்கு விளைவிக்கும் நிரல்களாகும்.
வைரஸ்கள் கணினியில் எவ்வாறு நுழைகின்றன?
கணினி வைரஸ்கள் மின்னஞ்சல்கள் மற்றும் மின்னஞ்சல் இணைப்புகள் வழியாக எளிதில் பரவுகின்றன. பெரும்பாலான மின்னஞ்சல் வைரஸ்கள் மிகவும் கவர்ந்திழுக்கும் முறையில் புனைவேடமிட்டுள்ளன (உதாரணமாக புகைப்படங்கள், ஒடியோ மற்றும் வீடியோ கோப்புகள், மின்-வாழ்த்து அட்டைகள் போன்றவை). தாக்குபவர்களால் நிகழ்த்தப்படும் இத்தகைய தந்திரங்களுக்கு இவை தொடர்பில் அறியாத பயனர்கள் இரையாகலாம். சந்தேகத்திற்கிடமான மற்றும் தெரியாத தரப்பினரிடமிருந்து பெறப்படும் மின்னஞ்சல்களைத் திறக்கும்போது பயனர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அவற்றைத் திறப்பதைத் தவிர்ப்பது நல்லது. இணையத்தில் இருந்து பெறப்படும் கோப்புகள் வைரஸ்களைக் கொண்டிருக்கலாம் ஆகவே அவற்றை பதிவிறக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் .
கணினியில் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள்
- உரிய காரணமின்றி கணினி மெதுவாக தொடக்கப்படும்.
- திடிரென கணினி தானாகவே மீள ஆரம்பிப்பது அடிக்கடி இடம்பெறுவதுடன் கணனி அசாதாரண நடத்தைகளைக் காண்பிக்கும்.
- கணினியில் நிறுவப்பட்ட பயன்பாடுகள் எதிர்பார்த்தவாறு செயற்படாது.
- அசாதாரணமான (பொதுவாக மோசமாக எழுதப்பட்ட) வழு தொடர்பிலான அறிவிப்புகள் இருக்கக்கூடும்.
- பயனரால் உருவாக்கப்படாத புதிய குறுக்குவழிகள் அல்லது ஏனைய படவுருக்கள் கணினியில் இருக்கலாம்.
- பயனர்கள் தங்களது அனுமதியின்றி கோப்புகள் அல்லது பயன்பாடுகள் அவர்களின் கணனியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
வைரஸ் தாக்குதல்களிலிருந்து கணினியை எவ்வாறு பாதுகாக்க முடியும்?
- இணையத்தைப் பயன்படுத்தும் போது தீச்சுவரைப் பயன்படுத்தவும்.
- தேவைப்படும் போது சகல கணினிகளிலும் அனைத்து மென்பொருட்களையும் இயக்க முறைமைகளையும் புதுப்பிக்கவும்.
- புதுப்பித்த வைரஸ் தடுப்பு மென்பொருளைப் பயன்படுத்தவும்.
- தெரியாத மூலங்களிலிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல்களைத் திறக்க வேண்டாம்.
- தெரிந்த மூலத்திலிருந்து கூட அறியப்படாத இணைப்புகள் அல்லது உள்ளடக்கத்தை (இணைப்புகள் போன்றவை) திறக்க வேண்டாம்.
- எந்தவொரு மின்னஞ்சல் இணைப்புகளையும் திறப்பதற்கு முன்பாக வைரஸ் ஸ்கான் இனை மேற்கொள்ளவும்.
- தெரியாத அல்லது சந்தேகத்திற்கிடமான வலைத்தளங்களைப் பார்வையிட வேண்டாம்.
- உங்கள் தனிப்பட்ட விவரங்களை தெரியாத தரப்புக்கள் அல்லது சேவைகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். (உங்கள் மின்னஞ்சல், வங்கி கணக்குகள், கடன்அட்டை இலக்கங்கள் போன்றவை)
- பயன்பாடுகள் அல்லது உள்ளடக்கத்தைப் பதிவிறக்க நம்பகமான வலைத்தளங்களைப் பயன்படுத்தவும்
தீச்சுவர் (firewall) என்றால் என்ன?
தீச்சுவர் என்பது இணையம் அல்லது வலையமைப்பிலிருந்து பெறப்பட்ட தகவல்களைச் சரிபார்த்து தீச்சுவர் அமைப்புகளைப் பொறுத்து அதைத் தடுக்கும் அல்லது கணினிக்கு அனுப்ப அனுமதிக்கும் மென்பொருள் அல்லது வன்பொருள் சாதனமாகும். உதாரணமாக வலையமைப்பு அல்லது இணையம் மூலமாக உங்கள் கணினியை ஹேக்கர்கள் அல்லது தீங்கிழைக்கும் மென்பொருட்கள் (வோர்ம்கள் போன்றவை)அணுகுவதை தடுக்க தீச்சுவர் உதவும். தீங்கிழைக்கும் மென்பொருளை உங்களது கணனியில் இருந்து ஏனைய கணினிகளுக்கு அனுப்புவதைத் தடுக்கவும் தீச்சுவர் உதவும்.
இணையத்திலிருந்து வைரஸ் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க பயனர்கள் தங்கள் தனிப்பட்ட கணினிகளில் தீச்சுவரை நிறுவலாம். தீச்சுவரானது அதன் வழியாக செல்லும் சகல தரவுகளையும் சரிபார்த்து அதன் இலக்கை அவை அடைவதற்கு அனுமதிக்கிறது அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயனரால் வரையறுக்கப்பட்ட விதிகளின் தொகுப்பைப் பொறுத்து தரவானது இலக்கை அடைவதை தடுக்கிறது .
வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் என்றால் என்ன?
வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் என்பது கணினி நிரலாகும், இது வைரஸ்கள் வோர்ம்கள் போன்ற தீங்கிழைக்கும் மென்பொருட்களைக் கண்டறிந்து தடுத்து அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கிறது. புதுப்பித்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் பயனர்களுக்கு புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள வைரஸ் அச்சுறுத்தல்களுக்கு எதிராக உதவுகிறது.
வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் எவ்வாறு செயல்படுகிறது?
வைரஸ் தடுப்பு மென்பொருள் பொதுவாக வைரஸ்களைக் கண்டுபிடித்து அகற்ற இரண்டு வெவ்வேறு நுட்பங்களைப் பயன்படுத்துகிறது:
- வைரஸ் அகராதி அணுகுமுறை.
- சந்தேகத்திற்கிடமான நடத்தை அணுகுமுறை.
வைரஸ் அகராதி அணுகுமுறை
வைரஸ் அகராதி அணுகுமுறையில், வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் ஒரு கோப்பை ஆராயும்போது, இது வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை உருவாக்கியவரின் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட வைரஸ்களின் அகராதிக்கு அதனை குறிப்பிடும். கோப்பில் உள்ள ஒரு குறியீடு அகராதியில் அடையாளம் காணப்பட்ட எந்த வைரஸுடனும் பொருந்தும் போது வைரஸ் எதிர்ப்பு மென்பொருளானது கோப்பை அழிக்கும் மற்றும் கோப்பு ஏனைய நிரல்களால் அணுக முடியாதவாறு வைரஸ் மேலும் பரவ முடியாது தனிமைப்படுத்தும் அல்லது கோப்பிலிருந்து வைரஸை நீக்கி கோப்பை சரிசெய்ய முயற்சிக்கும். நடுத்தர மற்றும் நீண்ட காலங்களில் வெற்றி பெறுவதற்கு , வைரஸ் அகராதி அணுகுமுறைக்கு புதுப்பிக்கப்பட்ட வைரஸ் அகராதி உள்ளீடுகளின் காலாந்திர ஒன்லைன் பதிவிறக்கங்கள் தேவைப்படுகின்றன. இது உங்கள் கணினியில் ஏற்கனவே அறியப்பட்ட வைரஸ் தாக்குதல்களின் அபாயத்தைக் குறைக்கும்.
சந்தேகத்திற்கிடமான நடத்தை அணுகுமுறை
இதற்கு மாறாக, சந்தேகத்திற்குரிய நடத்தை அணுகுமுறையானது ஏற்கனவே அறியப்பட்ட வைரஸ்களை அடையாளம் காண முயற்சிக்காது, அதற்குப் பதிலாக எல்லா நிரல்களின் நடத்தையையும் இது கண்காணிக்கிறது. உதாரணமாக ஒரு நிரலானது இயங்கக்கூடிய மற்றொரு நிரலுக்கு தரவை எழுத முயற்சிக்கும்போது இது சந்தேகத்திற்கிடமான நடத்தையாக சுட்டிக் காட்டப்படுவதுடன் இது குறித்து பயனர் எச்சரிக்கப்பட்டு, என்ன செய்வது அவரிடம் கேட்கப்படும். அகராதி அணுகுமுறையைப் போலன்றி சந்தேகத்திற்கிடமான நடத்தை அணுகுமுறை எந்தவொரு வைரஸ் அகராதிகளிலும் இதுவரை காணப்படாத புத்தம் புதிய வைரஸ்களுக்கு எதிராக ஆற்றல் மிக்க பாதுகாப்பை வழங்குகிறது.
வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்
இன்று ஏராளமான வைரஸ் தடுப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. கணினியைப் பாதுகாக்க வைரஸ் தடுப்பு மென்பொருளைத் தெரிவு செய்வது பயனர்களின் தேவைகளைப் பொறுத்தது. இருப்பினும், வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைத் தேர்ந்தெடுக்கும்போது சில விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
- மென்பொருள் தானாகவே புதுப்பிக்க கூடியதா
- மென்பொருளின் உரிமையாளருக்கு விரிவான புதுப்பிப்பு சுருக்கம் வழங்கப்பட்டுள்ளதா
- மென்பொருளை மின்னஞ்சல் மென்பொருளுடன் ஒருங்கிணைக்க முடியுமா
- இதன் மூலம் தானாகவே வைரஸ்களை ஸ்கேன் செய்ய முடியுமா
- புதிய வைரஸ்கள் பற்றிய துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் மென்பொருளின் உரிமையாளருக்கு வழங்கப்படுகிறதா
இன்று மிகவும் பிரபலமான மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் வைரஸ் தடுப்பு மென்பொருட்கள்
- பிட் டிஃபெண்டர் (Bitdefender)
- நோர்டன் (Norton)
- ஈசெட் என்ஒடி32 (ESET NOD NOD32)
- வெப்ரூட் (Webroot)
- கஸ்பர்ஸ்கை (Kaspersky)
- டிரென்ட் மைக்ரோ (Trend Micro)
- அவாஸ்ட் (Avast)
- அவிரா (Avira)
- பண்டா (Panda)
- ஏ.வி.ஜி (AVG)
- மக்கஃபி (McAfee)
- வைபிறி (VIPRE)
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்களிடம் தெரிவியுங்கள்.
தொலைபேசி: (011) 421-6062
மின்னஞ்சல்: help@hithawathi.lk
இந்த ஆவணமானது டெக்சேர்ட் உடன் இணைந்து எல்.கே டொமைன் பதிவகத்தின் பயிற்சி பிரிவால் தயாரிக்கப்பட்டது .மேலதிக தகவல்களுக்கு தயவுசெய்து http://www.nic.lk/index.php/outreach/training-materials ற்கு செல்க .