கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 11, 2021
அன்றாடம் நமக்குக் கிடைக்கும் மின்னஞ்சல்கள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கின்றன. அந்த மின்னஞ்சல் மோசடியானதா அல்லது மோசடியற்றதா என்பதை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. மோசடியானதொரு மின்னஞ்சலை அடையாளம் காண்பதற்கு கீழ்வரும் குறிகாட்டிகள் உங்களுக்கு உதவக்கூடும்.
முழுமையற்ற / எழுத்துப்பிழையுள்ள சொற்கள்
ஒரு மோசடி மின்னஞ்சலில் எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை அல்லது நிறுத்தற்குறிப் பிழை ஆகியன உள்ளடங்கியிருக்கும். அந்தவகை மின்னஞ்சலை அடையாளம் காண்பதற்கு இது ஒரு வழி ஆகும். தொழில்முறை நிறுவனங்களிலிருந்து நீங்கள் பெறும் மின்னஞ்சல்களில் அந்த தவறுகள் அரிதாகவே இருக்கும். பொதுவாக மோசடி மின்னஞ்சல்கள் ஆனவை, எழுத்து அல்லது இலக்கணத்தில் மிகவும் சிறப்புத் திறமை இல்லாத நபர்களால் தயாரிக்கப்படுகின்றன, அல்லது அவசரமாக எழுதப்படுகின்றன. ஆகையால், உண்மையானதொரு நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்டதாக காண்பிக்கப்படும் ஒரு மின்னஞ்சலை நீங்கள் கண்டால், ஆனால் அந்த மின்னஞ்சலில் எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் இருக்குமானால் அது அனேகமாக ஒரு மோசடி மின்னஞ்சலாக இருக்கும். அத்துடன் அது அழிக்கப்பட வேண்டியது.
தேவைப்படும் உடனடி நடவடிக்கை
உடனடி நடவடிக்கை தேவைப்படக்கூடிய ஒரு மின்னஞ்சலை நீங்கள் பெற்றால், அந்த நிறுவனத்தை நீங்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு, அந்த மின்னஞ்சலின் சட்டபூர்வமான தன்மையை விசாரித்தறிவது சிறப்பானது.
தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுமாறு கோரிக்கை
சில மோசடி மின்னஞ்சல்கள் உங்கள் தனிப்பட்ட தகவல், உள்நுழைவு நற்சான்றிதழ்கள் அல்லது கடனட்டை விவரங்களை உள்ளிடுமாறு உங்களை வற்புறுத்துகின்றன. உங்கள் கணக்கில் ஒரு சிக்கலை சரிபார்க்க அல்லது வேறு ஏதேனும் காரணத்தினைச் சுட்டியே இந்த வற்புறுத்தல் இடம்பெறுகின்றது. அவற்றில் சில உங்களை ஒரு போலி இணையத்தளத்திற்கும் அழைத்துச் செல்லும். இருப்பினும், சட்டபூர்வமான வணிகங்கள் ஒருபோதும் மின்னஞ்சல் வழியாக தகவல்களைக் கேட்க மாட்டா. எனவே, மிகவும் கவனமாக இருங்கள்.
பயனர்பெயரொன்றால் குறித்துரைக்கப்படல்
சில மோசடி மின்னஞ்சல் எழுதுநர்களிடம் உங்களது பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் தவிர உங்களது எந்தவொரு விபரமும் இருக்காது. அதனால், நீங்கள் “கனம் ஐயா / அம்மணி” என்பதான பொது அழைப்பொன்றின் வாயிலாகவே குறித்துரைக்கப்படுவீர்கள். ஆனால், சட்டபூர்வமான நிறுவனங்கள் தம் வாடிக்கையாளரை பெரும்பாலும் அவர்களின் முழுப்பெயரைக் குறித்துரைத்தே அழைக்கின்றன. உங்களை சரியாக குறித்துரைக்காது உங்களது தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதற்கு முயற்சித்தால் அந்த மின்னஞ்சல்கள் மோசடியானவை எனத் தீர்மானிக்கலாம்.
இணையத்தளப்பக்க இணைப்பைச் சரிபார்க்கவும்
உங்களுக்குத் தெரியாத அல்லது நீங்கள் எதிர்பார்க்காத இணைப்புகளைக் கிளிக் செய்வது மிகவும் ஆபத்தானது. தீம்பொருள் அல்லது மோசடி மென்பொருள் மூலம் உங்கள் சாதனம் அல்லது தரவுக்கு அவை சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு மோசடி மின்னஞ்சலை அடையாளம் காண்பதற்கான சிறந்த வழி எதுவென்றால், மோசடி செய்பவர்கள் உங்களுக்கு அனுப்பும் வலைப்பக்க இணைப்பைச் சரிபார்ப்பதுதான். இணையத்தள இணைப்பை ஆய்வு செய்ய இரண்டு எளிய முறைகள் உள்ளன. அந்த இணையத்தள இணைப்பின் மீது மவுஸின் சுட்டியை வையுங்கள் ஆனால் அழுத்தி விடாதீர்கள். அவ்வாறு வைத்தவுடன், அந்த மென்பொருளின் அடியிலோ அல்லது இணைய உலாவியின் நிலைப்பட்டியிலோ, அந்த இணையத்தள இணைப்பின் உண்மையான வலைத்தள முகவரியைக் காண்பீர்கள். சுட்டிக்காட்டப்பட்ட இணைப்பு முகவரியை நீங்கள் உண்மையான நிறுவனத்தின் இணையத்தள முகவரியுடன் சரிபார்க்கலாம்.
இரண்டாவது வழி என்னவென்றால், மின்னஞ்சலின் இணைப்பை வலது கிளிக் செய்து “இணைப்பு இருப்பிடத்தை நகலெடு” அல்லது கொடுக்கப்பட்டதற்கு ஒத்த விருப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் அதை டெக்ஸ்ட்பாட் அல்லது மைக்ரோசொஃப்ட் வேர்ட் மென்பொருளில் இட வேண்டும். அறிமுகமில்லாதவரால் உங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் உண்மையான இணையத்தள முகவரியை அங்கே காணலாம். அதன்படி நீங்கள் அந்த இணைப்பை நிறுவனத்தின் உண்மையான இணையத்தள முகவரியுடன் ஒப்பிட்டு அவை பொருந்துமா இல்லையா என்பதைச் சரிபார்க்கலாம். “இது போலியானதா அல்லது உண்மையான வலைத்தளமா என்பதை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்!” என்ற கட்டுரையின் மூலம் ஒரு போலி அல்லது மோசடி இணைப்பை எவ்வாறு தீர்மானிப்பது என்பது பற்றி மேலும் அறிக. இணைப்பு எவ்வளவு உண்மையானது என்பதை ஆராய்ந்த பிறகு, அது சந்தேகத்திற்குரியது என்று நீங்கள் உணர்ந்தால், அதைக் கிளிக் செய்ய வேண்டாம். நீங்கள் அதை நீக்குவதற்கான தொட்டியில் இடலாம் அல்லது மோசடி மின்னஞ்சலென புகாரளிக்கலாம்.