கடைசியாக புதுப்பிக்கப்பட்டது செப்டம்பர் 19, 2024

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களும் இடங்களும் கற்பனையானவை.

மிலான் வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் இணைக்கப்பட்டிருந்தார் இரண்டு வார விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார். ஓய்வெடுப்பதற்கும், நண்பர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் இது அவருக்கு வாய்ப்பாக அமைந்தது. அத்துடன் அவர் தனது சமூக ஊடக வலைத்தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் நேரம் போதுமானதாக இருந்தது, இராணுவ முகாமில் இருந்தபோது அதற்கான நேரம் அவருக்கு மிகவும் அரிதாகவே காணப்பட்டது எனலாம்.

ஒரு நாள், அவரது நெருங்கிய தோழனும், சக ராணுவ ஊழியருமான டக்சிதவிடமிருந்து ஒரு குறும்செய்தி வந்திருந்ததை அவர் பார்த்தார்.

டக்சித: எனக்கு உங்கள் உதவி தேவை. ஆன்லைன் முகநூல் நிகழ்ச்சித் திட்டத்தில் நான் தூதர் தளத்திற்காக போட்டியிடுகிறேன். தயவுசெய்து இந்த xxxxxxxxxxx இணைப்பைப் பயன்படுத்தி எனக்கு வாக்களிக்க முடியுமா???

மிலான் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார், ஏனெனில் அவர் கடைசியாக அவரது நண்பனைச் சந்தித்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. மிகவும் குழப்பமடைந்த மிலான், உடனடியாக நண்பன் டக்சிதவுக்கு அழைப்பை ஏற்படுத்தினான், ஆனால் அவனிடமிருந்து பதில் இல்லை. அவன் மீண்டும் முயற்சித்தான், ஆனால் மிலானுக்கு ஏமாற்றத்தையே தரும் வகையில், இன்னும் அவனது நண்பனிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், டக்சித ஒரு பயிற்சித் திட்டத்தில் இருந்ததும், அவனால் அழைப்பை ஏற்க முடியாது என்பதும் மிலானுக்கு நினைவு வந்தது.

அந்த நாள் முடிந்தது, மறுநாள் காலை மிலான் தனது பழைய பள்ளி நண்பர்களுடன் காலிக்கு ஒரு சுற்றுலா சென்றான், ஆனால் அவன் அப்பொழுதும் டக்சிதவின் வித்தியாசமான குறும் செய்தியால் குழப்பமடைந்திருந்தான். அவன் தனது நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது, ​​இதைப்பற்றி அவர்களுடன் பகிர்ந்து கொண்டான், அப்பொழுது அவனது நண்பர் ஒருவர் யூடியூப் சேனலில் ஆன்லைன் மோசடிகளைப் பற்றிப் பேசுவதில் பெயர் பெற்ற ஹிதவதியிடம் இதுகுறித்து பேசி உறுதிப்படுத்திக்கொள்வது சிறந்தது என்று பரிந்துரைத்தார்.

மிலான் அதற்கு சம்மதித்து ஹிதவதிக்கு அழைப்பை ஏற்படுத்தி நிலைமையை எடுத்துக் கூறினான், ஹிதவதி மிலான் சொல்வதை கவனமாகக் கேட்டார்.

ஹிதாவதி: மிலான், இன்றைய நாட்களில் இது மிகவும் பொதுவான மோசடியாகக் காணப்படுகின்றது. உங்கள் நண்பரின் முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்க (திருடப்பட்டிருக்க) வேண்டும், மேலும் பல கணக்குகளை ஹேக் செய்வதற்காக மோசடி செய்பவர் உங்கள் நண்பரின் நண்பர் பட்டியலில் தீங்கிழைக்கும் இணைப்பைக் கொண்ட இந்த வகையான செய்தியை இப்போது அனுப்புகிறார்.அக்கணக்குகளை ஹேக் செய்த (திருடிய) பின்னர் மோசடி செய்பவர்கள் அக்கணக்கின் உண்மையான உரிமையாளர்களை, பணம் அல்லது பிற செயல்களைக் கோரி உண்மையான கணக்கு வைத்திருப்பவர்களை மிரட்டுகிறார்கள். எனவே,  வாக்களிப்பதாகக் கூறும் எந்த இணைப்புகளையும் கிளிக் செய்யாதீர்கள், அவை மோசடி செய்பவர்கள் தங்கள் திருட்டு சங்கிலியைத் தொடர்வதற்கு உதவியாக அமையும். தயவுசெய்து இந்த சூழ்நிலையை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். எங்கள் இணையதளம் மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் இதே போன்ற மோசடிகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.


பயனுள்ள தகவல்களை வழங்கியதற்காக மிலான் ஹிதாவதிக்கு நன்றி தெரிவித்தார். மோசடிகளைப் பற்றி தொடர்ந்தும் தெரிந்துகொள்ள ஹிதாவதியின் யூடியூப் சேனலைப் பின்தொடரவும் அவர் முடிவு செய்தார்.

முன்னெச்சரிக்கை குறிப்புகள்:

  • மோசடி செய்பவர்கள் உங்கள் கணக்குகளை ஹேக் செய்யவும் (தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும்), உங்கள் தனிப்பட்ட / நிதித் தகவல்களைத் திருடவும் மற்றும் பிற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடவும் போலியான அல்லது ஹேக் செய்யப்பட்ட (திருடப்பட்ட) கணக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.
  • மோசடிக்கான குறும்செய்தி உங்களுக்கு கிடைக்கப்பெற்றால், நீங்கள் பதிலளிக்கவோ அல்லது எந்த இணைப்புகளையும் கிளிக் செய்யவோ வேண்டாம் . அதில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.
  • மோசடிக்கான குறும்செய்தியை அனுப்பிய கணக்கைப் புகாரளித்து தடுக்கவும்.
  • பொதுவான மோசடிகளைப் பற்றி நீங்கள் அறிந்திருங்கள்.
  • ஒரு நண்பர் உங்களுக்கு சந்தேகத்திற்குரிய குறும் செய்தியை அனுப்பினால், அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் (திருடப்பட்டிருக்கலாம்). செய்தி உண்மையானதா என்பதைச் சரிபார்க்க அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.